வயோதிக வலி/#tamilsirukathaigal/சிறுகதை/#moralstoriesintamil/Gnana Selvam Novel

 முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விட்டு சந்தோஷமாக மனைவியுடன் வாழ்ந்த மகனுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி.




        அவசரம் அவசரமாக தனக்கான உடமைகள், மருந்து மாத்திரைகள் எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்து வைத்த கந்தசாமி சுவரில் மாட்டியிருந்த மனைவியின் புகைபடத்தை கண்ணில் நீரோடு நிமிர்ந்து பார்த்தார்.

          இந்த வீட்டில் அவளுடன் கம்பீரமாக வாழ்ந்த நொடி மனதில்   வந்து போனது. மனைவியோடு வாழ்ந்த ஒவ்வொரு  நிமிடங்கள் கனவு போல வந்து போயின.எப்படி எல்லாம் ஒற்றை மகன் என்று பாசம் காட்டி வளர்த்தோம். அவனுக்காக நம் வாழ்வின் சந்தோஷங்கள் எத்தனை இழந்தோம். அவனுக்கு நல்ல படிப்பையும் சொகுசான வாழ்வுக்காக எத்தனை மணி துளிகளை பசி, தூக்கம் மறந்து உழைத்தோம். இன்று அவனுக்கு மனைவி, மகள், மகன் வந்த உடன் நான் அவன் வீட்டு வேலைக்காரன் ஆகிவிட்டேன் லெட்சுமி. இதற்கு மேல் என்னால் ஒரு நொடி இருக்க முடியாது.

        சட்டென அவர் கண்ணில் நீர் கோர்த்து கொண்டது.

           எத்தனையோ நாள் மனைவிக்காக என்னை எடுத்தெறிந்து பேசியிருக்கிறான். நானும் எத்தனையோ நாள் பொறுத்து போயிருக்கிறேன். ஆனால் இன்று அவன் தகப்பனை அற்பனை போல் பேசி விட்டான். தன்மானம் உள்ள எவனும் இதற்கு மேல் இங்கு தங்க மாட்டான். நான் கிளம்புகிறேன் லெட்சுமி.

           வாய் விட்டு தன் கையில் இருந்த மனைவி புகைப்படத்திடம் சொன்னவர் அவளின் புகைப்படத்தையும் பைக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே வந்தார். ஹாலில் மகன் குடும்பமாக இருந்து உணவு உண்டு கொண்டிருந்தான். ஒரே ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அதன் பின் குனிந்து கொண்டான்.

          எங்கு போகிறீர்கள் என்று கேட்கவோ ?... சாப்பிட அழைக்கவோ ? செய்யவில்லை. போகாதீர்கள் என்று தடுக்கவும் இல்லை. உனக்கு விருப்பம் எனில் கிளம்பு என்பது போல இருக்க… வெறுத்து போன கந்த சாமி…

           வெடுக்கென திரும்பி வாசலை நோக்கி நடந்தார். வெளி வந்தவர் திரும்பி வீட்டை பார்த்தார். அவரை அறியாமல் இரு துளி கண்ணீர் கட்டுபாட்டை மீறி வடிந்தது. இந்த வீட்டில் வசித்தாக வேண்டும் என்று இரவு பகலாய் உழைத்து சிறுக சிறுக சேர்த்த செல்வத்தால் உருவான வீடு. இன்று என்னை வெளியே அனுப்புகிறது. உள்ளமும் கண்களும் கலங்க…

           தலையை சட்டென திருப்பி கொண்டு அவசரமாக நடந்து சாலையில் ஏறினார். மனதில் தீர்மானித்து கொண்டவர் நேரே சத்யம் முதியோர் இல்லத்தை நோக்கி பயணமானார். வாசலில் வந்து நின்ற பெரியவரையும் அவர் முகத்தில் தெரிந்த சோகத்தையும் பார்த்த அந்த இல்லத்தின் நிர்வாகி அவரை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்து சென்று விபரம் கேட்க…

          நான் ஒரு ரிட்டயர்ட் வாத்தியார் சார். என் மனைவி மூணு வருஷத்துக்கு முன்னால தான் இறந்தாங்க. அது வரை அவா எனக்கு எந்த கஷ்டமும் வராம பாத்துகிட்டா. ஏன் மகன் கூட அதுவரை என்னை மதிப்பா தான் வச்சிகிட்டான். அவா போன பின்னால வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம தான் இருந்தேன். மொத்தமா உடைஞ்சி போயிருந்த எனக்கு அப்போ தான் குடும்பத்துல இருந்த மரியாதை தெரிஞ்சிது. இதுவரை என் மனைவி பாத்து வந்த எல்லா வேலையையும் என் மருமகா என் மேல திணிச்சா. அப்போ தான் என் லெட்சுமி இந்த வீட்டு மகாராணியா இந்த வீட்டுல வாழல :ஒரு சம்பளம் இல்லாத வேலைகாரியா தான் வாழ்ந்திருக்காணு தெரிஞ்சிகிட்டேன். அந்த அளவு என் மருமகா என்னை விடாம வேலை வாங்கிட்டிருந்தா. நானும் நம்ம வீட்டு வேலை தானே. சின்ன புள்ளை அவா. அவளை வெளியில அனுப்ப முடியுமாணு அவா சொன்ன அம்புட்டு வேலையும் செய்தேன்.

            அப்படி செய்து கொடுத்தாலும் அந்த வீட்டுல மரியாதையோ மதிப்போ எனக்கு இல்லாம போச்சு. சாப்பிட்டியா? உனக்கு ஏதாவது வேணுமானு யாரும் கேட்க மாட்டாங்க. அந்த வீட்டுல எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாதது போல உணர ஆரம்பிச்சேன். ஆனாலும் இதுதான் வயோதிக நிலைணு என்னை நானே தேத்திக்கிட்டேன்.

           ஆனா எப்போ அந்த ஆக்ஸிடென்ட் நடந்து என் காலு முறிஞ்சி படுக்கையில விழுந்தேனோ அன்றிலயிருந்து வீட்டுக்கு தேவையில்லாத குப்பை போல ஆகிட்டேன் சார். குணமாகிற வரை குத்தல் பேச்சுனா… நடமாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் விடாத வேலை என்னால செய்ய முடியல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என்னோட வலி தெரியாம ரொம்ப பேசிட்டா என் மருமகா. 

         என் மருமகளுக்கு மட்டும் இல்ல என் மகனுக்கு கூட நான் அங்க இருக்கிறது புடிக்கல. எப்போதும் சண்டை சச்சரவு தான் சார். தாங்க முடியல… அதான் வந்துட்டேன்.

          கந்தசாமி தன் மன குமுறலை கொட்டி தீர்த்த அடுத்த நொடி … செயரில் இருந்து எழுந்த அந்த நிர்வாகி ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் என்னை அழைத்து சென்று விபரம் சொல்லி சேர்த்து கொள்ள… என் அறுபத்து ஆறாவது வயதில் இருந்து என் வாழ்க்கை பயணம் அந்த இல்லத்தில் ஆரம்பமானது.

            வீட்டில் இருந்ததை விட மிக மிக சந்தோஷமாகவே உணர்ந்தேன். அங்கு யாரும் மனது நோக திட்டவில்லை. கூர்மையான வார்த்தைகளால் குத்தி கிழிக்கவில்லை. செய்ய முடியாத எந்த வேலையையும் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. தந்த சின்ன சிறு வேலையை செய்ய முடியா விட்டால் கூட யாரும் திட்டவில்லை.

         சமயத்துக்கு உணவு கிடைத்தது. மனம் திறந்து பேச மனிதர்கள் கிடைத்தார்கள். உண்மையில் மனம் நிறைவோடு ஒரு சந்தோஷமான வாழ்க்கை தான் வாழ்ந்தேன். ஆனால் இரவு நேரங்களில் அதிகம் தனிமையை உணர்ந்தேன். அந்த நேரம் மனைவியின் புகைபடத்தை எடுத்து பார்த்து கொண்டாலும் பேரன் பேத்தியின் நியாபகம் நெஞ்சை ஈரமாக்கும். கூடவே மகனின் நிழல் இல்லாமல் எங்கோ யார் வீட்டிலோ வந்து தங்கியது போல மனது வலிக்கும். அப்படியான நேரங்களில் மகனும் மருமகளும் சொன்ன வார்த்தையை நினைத்து மனதை தேற்றி கொண்டேன்…

         மாதங்கள் பல உருண்டோடின. என் மனம் அவர்களை பார்க்க ஏங்க ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் யாரும் இதுவரை வந்து தன்னை பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் என்னை அடங்கி போக வைத்தது. பத்து மாதம் கழிந்த பிறகும் அப்பா என்ன ஆனார் என்று கூட தேடி வராத மகனை நினைக்கையில் மனது ரணமாக வலித்தது.

           என்னோட  முக வாட்டத்தை பார்த்தே அவருடன் இருந்த ஒருவர்.

            என்னப்பா வீட்டு நியாபகமா? 

என கேட்க பதில் சொல்லாமல் மென் சிரிப்பை உதிர்த்து கொண்டு நிற்க…

              தெரியும்ப்பா… இங்க எல்லா வசதியும் செய்து கொடுத்து உட்கார வச்சிருந்தாலும் மனசு உறவுகளை தேடத் தான் செய்யும். ஆனா அந்த உறவுகளுக்கு நாம தேவையில்லயே. அதனால தானே பழையதை குப்பையில தூக்கி போடுறது போல போட்டுட்டாங்க. வலிக்குதுய்யா…

          சொன்னவர் கண் கலங்க கந்த சாமிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

           நாம இவனுங்களுக்கு என்னவெல்லாம் பண்ணுனோம். கடைசியில பெத்தவங்களுக்கு இவனுங்க செய்த காரியம் இப்படி தள்ளி வைக்கிறது தான். தள்ளி வச்சி அவனுங்க வாழ முடிவெடுத்த பிறகு நாம எதுக்கு அவனுங்களை பற்றி நினைக்கணும். வாரும் போய் பேப்பர் படிக்கலாம் என கையோடு என்னையும் அழைத்து சென்றார்.…

        என்னோட வாழ்க்கை அப்படியே நகர்ந்தது. மறுபடியும் ஒரு மாதம் சென்றபின் அந்த பழைய கட்டிடத்தின் முன் வந்து நின்றது ஒரு அம்பாஸிட்டர் கார். காரை கண்டதும் அத்தனை கண்களும் அதன் மீது தான் படிந்து நின்றன.

            எல்லார் மனதிலும் வேறு ஒரு வீட்டு குப்பை இருப்பிடம் தேடி வருகிறது என்று தான் நினைத்தது. ஆனால் எல்லாரும் நினைத்தது போல் இல்லாமல் அந்த காரில் இருந்து என்னுடைய மகனும் மருமகளும் பேரனும் இறங்க … பல மாதங்களுக்கு பின் தன்னை தேடி வந்து விட்டான் என் மகன் என்ற உற்சாகத்தில் வெளியே வந்தேன் நான்.

          என்னை  பார்த்த என் மகன் என் அருகில் வந்து…

            கிளம்புங்க வீட்டுக்கு போலாம் என அழைக்க… உள்ளம் குளிர்ந்து போனது. இப்பவாவது தந்தையை வீட்டிற்கு கூட்டிப் போக வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே என்று நினைத்து கொண்டேன் என்றாலும்…

            எந்த வீட்டிற்கு? என வீம்பாக கேட்க…

            எல்லாம் நம்ம வீட்டுக்கு தான்…

             நம்ம வீடா?... இது தான் என் வீடு. நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்.  

             ஏன்ப்பா இப்படி பேசுறீங்க. ஏதோ கோபத்துல போறீங்க. கோபம் தீர்ந்ததும் வந்திடுவீங்கணு தான் நினைச்சேன். ஆனா இப்படி வந்து இங்க உட்கார்ந்துட்டீங்க.

            ஏன்ப்பா அது உனக்கு ஒரு வருஷம் ஆகிறப்ப தான் தெரிஞ்சிதாக்கும்.

            இல்லப்பா. உங்களுக்கு நிம்மதி அங்க இல்லணு தான் இங்க வந்திருக்கீங்க எதுக்கு தொந்தரவு பண்ணணம்ணு தான் அழைக்க வரல.

            ஒ… அப்படியா? அப்போ இன்று எதுக்குப்பா வந்தா?...

             இன்னும் இரண்டு நாளுல உங்க பேரனுக்கு பிறந்த நாள் வருதுலப்பா. வீட்டுல ஒரு சின்ன பங்ஷன் வச்சிருக்கேன். அதான் உங்களையும் அழைச்சிட்டு போலாம்னு.

             மகன் இழுக்க.. மருமகளும் கெஞ்ச ஆரம்பித்தாள். கூடவே பேரனும். அவர்களின் பேச்சை கேட்டு கொண்டிருந்த நிர்வாகியும் வற்புறுத்த மனதை மாற்றி கொண்டு அவர்களோடு கிளம்பி வீட்டிற்கு வந்தேன். வந்த அடுத்த ஒரு மணி நேரத்திலே அவர்கள் எதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து போனது. மனது ரணமாக வலித்தது. என்னவோ மகனும் மருமகளும் மனது மாறி தான் அழைக்க வந்திருப்பதாக நினைத்த எனக்கு பங்ஷனுக்கு வருபவர்கள் என்னை பற்றி விசாரிக்கும் போது பதில் சொல்ல முடியாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே என்னை இருவரும் அழைக்க வந்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்ததும் மனது கசந்து போனது.

          ஏனோ அதற்கு பிறகு அந்த பங்ஷனில் சந்தோஷமாக நிற்க கூட தோன்றவில்லை. சிரிப்பை பொய்யாக முகத்தில் ஒட்டி கொண்டு பங்ஷனை முடித்தேன். அது வரை கூட அவர்கள் இருவரும் செய்ததை மன்னிப்பேன். ஆனால் அதன் பிறகு மூன்று நாளும் அவர்கள் படுத்தினார்களே ஒரு பாடு அதை செத்தாலும் என்னால் மறக்க முடியாது.

          ஒரு வேளை நான் மொத்தமாக இங்கே தங்கி விடுவேனோ என பயந்து என் மருமகள் பேசிய பேச்சும், என் மகன் நடந்து கொண்ட முறையும் உண்மையிலே எதற்காக பிள்ளைகளை பெற்று கொள்கிறோம் என கலங்க வைத்து விட்டது. இதற்கு மேல் ஒரு நொடி நிற்க கூடாது என நினைத்து அவர்கள் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்து விட்டேன். முதியோர் இல்லத்தில் கேட்ட ஒருவரிடமும் நடந்ததை சொல்லவில்லை. 

           ஆனால் செத்தால் கூட இனி உறவு என அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என தீர்மானித்து கொண்டேன். அதன்படி அதன் பிறகு எப்போதுமே நான் அங்கு செல்லவில்லை. அவர்கள் யாரும் என்னை பார்க்க வரவுமில்லை. இடையில் முடியாமல் போன போதும்… மனைவியின் ஆண்டின் போதும் கூட நிர்வாகி உங்களை அழைத்து கொண்டு போகிறோம் என்ற போதும் மறுத்து விட்டேன். டைபாய்டு வந்து மரண படுக்கைக்கு என்னை தள்ளிய போதும் அவன் வீட்டிற்கு செல்ல மறுத்து விட்டேன்.

           ஆனால் என் கடைசி காலம் இது என உணர்ந்த நிர்வாகி என் மகனுக்கு செய்தி அனுப்பினார். முதலில் அனுப்பிய செய்திக்கு எந்த பதிலும் இல்லை. அடுத்து இல்லத்தில் உள்ள ஒருவர் நேரடியாக போய் அழைத்ததின் பெயரில் வேண்டா வெறுப்பாக வந்து சேர்ந்தான்.

          அவன் வந்து சேர்ந்த பின் தான் விசயம் எனக்கு தெரிந்தது. இதுவரை என்னையும் என்னை போன்றோரையும் பராமரிக்கும் அந்த அம்பாள் முன் கைகூப்பினேன்.

           தயவு செய்து என்னை இவனுடன் அனுப்பி விடாதீர்கள். நான் செத்தால் கூட என் உடலை இவனிடம் கொடுத்து விடாதீர்கள்.இதுவரை என்னை நலமுடன் பார்த்து கொண்டது போது என் இறுதி யாத்திரையையும் நீங்களே பார்த்து அனுப்பி வையுங்கள். அதற்கு செலவுக்கு என் பி. எப் பணம் முழுவதையும் ஆசிரமத்தின் பெயருக்கு மாற்றி விட்டேன்.

            இந்த வார்த்தை என் வாய் இருந்து வந்ததுமே என் மகனின் மூஞ்சு போன போக்கை பார்க்க வேண்டும். அதன் பின் கெஞ்ச ஆரம்பித்தான். இதற்கு மேல் அவன் உறவு எனக்கு தேவை என்று தோன்றவில்லை. பிள்ளையை பெற்று வளர்த்து ஆளாக்குவதே வயோதிக நிலையில் தாங்கி பிடிக்க தான் அதை செய்யாத உறவு இருப்பதும் ஒன்றுதான் இல்லாதிருப்பதும் ஒன்று தான்.

           சொல்லி விட்டு கண் மூடிக் கொண்டார். அவன் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அதன் பின் அவர் கண் திறக்கவே இல்லை.

           இது நடந்த மூன்றாம் நாள் அந்த பெரியவர் அந்த இல்லத்தில் வைத்தே உயிர் துறந்தார். அவரின் கடைசி விருப்பப்படி ஆசிரமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்தே அவரின் பூத உடலை நல் அடக்கம் செய்தனர்.

           அவர் மகனின் முகத்தில் ஈயாடவில்லை. அவன் மனைவி அவன் காதில் கிசுகிசுத்தாள். அவளை பார்த்து முறைத்தான் மகன். அருகில் நின்ற அவளின் அண்ணன்.

            அவன் மெல்லிய குரலில் கிழவன் எல்லா பணத்தையும் அந்த இல்லத்துக்கு கொடுத்துட்டு தான் செத்திருக்கான் என்றான். மருமகள் அதிர்ந்து போய் நின்ற போது அவர் முன் வந்து நின்ற வக்கீல். அந்த முதியவரின் மகன் கையில் ஒரு காகிதத்தை கொடுக்க அதை பிரித்து பார்த்த அவரின் மகன் மொத்தமாய் அதிர்ந்து போய் வக்கீலின் முகத்தை பார்க்க…

          சாரி சார். இது உங்க அப்பாவோட முடிவு. அவர் சாகிறதுக்கு முன்னால அவருக்கான எல்லா சொத்தையும் அந்த முதியோர் இல்லத்துக்கு பேர்ல்ல எழுதி வச்சிட்டாரு. பெத்த பாவத்துக்கு வீட்டை மட்டும் விட்டு வச்சிருக்காரு.

             சொல்லி முடிக்கவில்லை. வெகுண்டெழுந்த அவரின் மருமகள்.

           அது எப்படி மகன் குத்து கல்லா இருக்கும் போது சொத்தை அவங்க பெயருக்கு எழுத முடியும்.

           மகனா? அப்படி ஒருத்தன் இருந்திருந்தா அவர் ஏம்மா அனாதை போல முதியோர் இல்லத்துக்கு போகணும். அப்படி யாரும் இல்லாததால தானே அவர் அனாதையா அந்த இல்லத்துல வாழ்ந்தாரு. தன்னை கடைசி காலத்துல பாத்துட்டவங்களுக்கு நன்றி கடனா தன்னோட சொத்தை கொடுத்துட்டு போயிருக்காரு. இதுல பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. காரணம் நீங்க யாரும் சம்பாதிச்ச சொத்தும் இல்ல. பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்தும் இல்ல. உன் அப்பா சுயமா சம்பாதிச்சு வாங்குன சொத்து. இந்த சொத்து மேல நீங்க கேஸ் போட கூட முடியாது.

           இந்த வீட்டை கூட மனிதாபி மானத்தால தான் வீட்டுக் கொடுத்திருக்காரு. அப்பா வேணாம். ஆனா அவர் உழைப்பு வேணும். அந்த உழைப்புல வாங்குன சொத்து வேணும். 

            இப்படி தான் இன்று நம்மில் பலரும் வாழ்ந்து வரோம். பணத்துக்கும் சொத்துக்கும் கொடுக்கும் மதிப்பை கூட நம்மை பெத்து வளர்த்து ஆளாக்கி நல்ல ஒரு வாழ்வை கொடுத்த பெற்றோருக்கு கொடுப்பது இல்லை. ஆசிரமங்கள் இது போன்ற இல்லங்கள் அவர்களை நல்லபடியாக பராமரிக்கலாம். ஆனால் தன் உறவோடு வாழ்ந்து மடியும் சுகம் கிடைக்குமா? வளர்ந்து விட்டோம் என அவர்களை கை கழுவ பார்க்கிறோமே… பெற்று விட்டோம் என அவர்கள் கை கழுவி ஆசிரமத்தில் கொண்டு போட ஆரம்பித்தால் நாட்டில் அனாதை ஆசிரமத்தை தவிர வேறு ஒன்றும் இருக்காது. 

          சிந்திப்பீர். தாய் தந்தையின் வயோதிக நிலை வாழ்வை அழகாக்குங்கள். அப்போது தான் நம் சந்ததியும் நம் வயோதிகத்தை அழகாக்கும்.


               முற்றும்…

Post a Comment

0 Comments